search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டூலெட் விமர்சனம்"

    ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சந்தோஷ், ஷீலா நடிப்பில் பல விருதுகளை குவித்திருக்கும் டூலெட் படத்தின் விமர்சனம். #Tolet #ToletReview #ToletMovieReview
    ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் மிக எளிமையாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களின் விருதுகள் முதல் தேசிய விருது வரை டூலெட் திரைப்படம் வென்றுள்ளது.

    நாயகன் சந்தோஷ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி ஷீலா, மகன் தருண். ஏழ்மையான நிலையில் இருக்கும் சந்தோஷுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில், சந்தோஷ்க்கும் வீட்டு ஓனருக்கும் பிரச்சினை வருகிறது. இதனால் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. 

    குறிப்பிட்ட நாட்களில் வீட்டை காலி செய்ய சொன்னதால், வாடகைக்கு வீடு தேடி தன் குடும்பத்துடன் அலைகிறார். அவர்களது தேடல் என்ன ஆனது என்பதே படம்.



    வளர்ச்சி என்று கூறிக்கொள்ளும் நகரமயமாக்கல் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை எளிய கதை மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் செழியன்.

    வீடு தேடி செல்லும் காட்சியில் ஒரு வீட்டில் முதியவர்களின் நிலையை பார்த்துவிட்டு திரும்பும் காட்சி, சந்தோஷ், ஷீலா தம்பதியோடு சேர்ந்து குருவிகளிடம் கூட எழும் பதற்றம், மனைவிக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நீட்டும்போது இருவரின் ரியாக்‌‌ஷன், புது வீட்டுக்கு செல்வதுபோல் மகன் நடித்து காட்டும் காட்சி என படம் நெடுக கவிதைகள்.

    சந்தோசும் ஷீலாவும் அடித்தட்டு தம்பதிகளாக வாழ்ந்து இருக்கிறார்கள். சினிமா கனவை துரத்த கதை எழுதும்போதும், மனைவிக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும்போதும், வீடு தேடி அலையும்போதும், சுயகவுரவத்தை சீண்டும் வீட்டு ஓனரிடம் சண்டைக்கு போகும்போதும் சந்தோஷ் கைதட்ட வைக்கிறார்.



    ஷீலா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பெரிய நம்பிக்கை. கணவனிடம் செல்ல சிணுங்கல், வீட்டு ஓனர் முன் பணிவு, வீட்டுக்குள் வந்து கோபப்படுவது, மகனை கொஞ்சுவது என்று நம் வீட்டு பெண்களை பிரதிபலிக்கிறார். தருணின் சின்ன சின்ன குறும்புகளுக்கு பின்னாலும் ஒரு அழகிய கதை இருக்கிறது.

    பின்னணி இசையோ பாடல்களோ இல்லாத படத்தில் அருள் எழிலன் வீடு காண்பிக்கும் காட்சிகளும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் காட்சிகளும் சுவாரசியமாக்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவும் தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவும் நம்மை சந்தோஷ் ஷீலா வாழ்க்கைக்குள் கூட்டி செல்கின்றன. 

    மிகப்பெரிய அரசியலை எளியவர்களின் வாழ்க்கையை கொண்டு வலிமையாக சொன்ன விதத்தில் உலக சினிமாக்கள் வரிசையில் டூ லெட் இடம்பெற்று இருக்கிறது.

    மொத்தத்தில் ‘டூலெட்’ நடுத்தர குடும்பத்தினரின் போராட்டம்.
    ×